சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். ஜெய், பிரபுதேவா, அபர்ணா தாஸ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய்யின் உடலை ஸ்கேனிங் செய்கின்றனர். இதன் மூலம் ‘3டி விஎஃப்எக்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்யை இளமையாகவோ வயதானவராகவோ காண்பிக்க முடியும். இதில் விஜய்-யை எப்படி காண்பிக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
நவீன டெக்னாலஜி மூலம் உருவாக இருக்கும் இந்தச் சிறப்பு விஎப்எக்ஸ் காட்சிக்காக அதிக செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் ஷாருக்கான் ‘ஃபேன்’ படத்துக்காகவும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காகவும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் 3 நாட்கள் ஸ்கேனிங் பணிகள் நடக்கின்றன. அதை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்புகின்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
