சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச பெருமாள், அலர்மேல் மங்கை தாயாருக்கு புஷ்போத்ஸவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீ வேதாந்த தேசிகருடன், ஸ்ரீஹயக்ரீவர் அருள்பாலித்து வந்தார். 350 ஆண்டு பழமையான இக்கோயிலில், ஸ்ரீ நிவாச பெருமாள் உடன் அலர்மேல் மங்கை தாயார் சன்னதி 1924-ம் ஆண்டு ‘தி இந்து’ குழுமம் சார்பில் கட்டப்பட்டது.
ஸ்ரீநிவாச பெருமாள் சந்நதியின் நூற்றாண்டு விழா கடந்தஏப்.18-ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏப்.1-ம் தேதி இக்கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவையொட்டி, ஒவ்வொரு மாதமும்கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள்,இசை, நாட்டியம், சொற்பொழிவு போன்றவை கோயில் நிர்வாகம்சார்பில் நடத்தப்பட்டது வருகிறது.கடந்த ஆக.13-ம் தேதி ஸ்ரீநிவாசபெருமாளுக்கு 22 வகையான பழங்களால் ‘பலோத்ஸவம்’ விழா நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று ‘புஷ்போத்ஸவம்’ விழா நடைபெற்றது.இதையொட்டி, மாலை 5.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள், அலர்மேல் மங்கை தாயாருடன் 22 வகையானமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகன மண்டபத்தில் எழுந் தருளி அருள் பாலித்தார்.
தொடர்ந்து, மயிலை கார்த்திகேயன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாளுக்கும், தாயாருக்கும் மலர்கள் சமர்பிக்கப்பட்டு திருவாராதனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
