புடாபெஸ்ட்: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளன்று இந்தியா சார்பில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, டிபி மானு மற்றும் கிஷோர் ஜேனா பங்கேற்றனர்.
25 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். 2022-ல் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து யூஜின் நகரில் நடைபெற்ற உலக தடகளப் போட்டியில் அவர் வெள்ளியை கைப்பற்றினார்.
புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (2023) பங்கேற்று, முதல் சுற்றில் 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர் தனது முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார்.
இரண்டாவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து, பட்டியலில் முதலிடம் பிடித்தார். மூன்றாவது வாய்ப்பில் 86.32 மீட்டர் தூரமும், நான்காவது வாய்ப்பில் 84.64 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் 87.73 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 83.98 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அரஷ்த் நதீம் தனது மூன்றாவது வாய்ப்பில் 87.82 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடந்து நான்காவது வாய்ப்பில் 87.15 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். கடைசி வாய்ப்பில் 81.36 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். இந்திய வீரர்கள் டிபி மானு (6-வது இடம்) மற்றும் கிஷோர் ஜேனா (5-வது இடம்) டாப் 6 வீரர்களில் இடம் பெற்றனர். அவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கமும், பாகிஸ்தானின் அரஷ்த் நதீம் வெள்ளியும், செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலம் வென்றார்.
மகளிர் 3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் இறுதிப் போட்டியில் பங்கேற்ற பருல் சவுத்ரி 11-வது இடம் பிடித்தார். ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் முகம்மது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முகம்மது அஜ்மல் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் ஆகிய இந்திய வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்று 5-ம் இடம் பிடித்தனர். 2:59.92 நிமிடங்கள் இலக்கை இந்திய வீரர்கள் கடந்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
