கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசியக் கோப்பை ஹாக்கி தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம் தேர்வு செய்யப்பட்ட போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேசிய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வான பெருமையைப் பெற்றார்.
சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் கார்த்தி செல்வத்தின் ஆட்டம் பிரமாதமாக அமைந்தது. தன் ஹாக்கி ஸ்டிக்கின் மூலம் தன் கனவின் இழையைத் தைத்து இந்திய அணியின் ஹாக்கி சீருடையை அணிந்ததன் பின்னணியில் தன் குடும்பத்தாரின் எண்ணற்ற தியாகங்கள் இருக்கிறது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார் கார்த்தி செல்வம்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கார்த்தி தனது முதல் ஆட்டத்தில் கோல் அடித்தார். ஆனால் 21 வயதான கார்த்தி செல்வத்திற்கு ACT இன் குழு நிலைகளில் மலேசியாவுக்கு எதிரான கோலை அவர் அடித்ததுதான் தனது வாழ்நாள் முழுவதும் போற்றக்கூடிய தருணம் என்கிறார். ஏனெனில் அந்த கோல் அவரது குடும்பத்தினரால் குறிப்பாக இவரது பெற்றோரால் நேரில் கண்டு களிக்கப்பட்டது என்பதாலேயே.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு கார்த்தி செல்வம் அளித்த பேட்டியில், “ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மலேசியாவுக்கு எதிராக நான் அடித்த கோலை வாழ்நாள் முழுதும் போற்றுவேன். என் குடும்பத்தினர் பார்க்க நான் அடித்த முதல் கோல் இது. நான் ஆடுவதை முதன் முதலில் அவர்கள் பார்த்த போட்டி இது. எனவே இது மறக்க முடியாத ஒரு வாழ்நாள் தருணம்.
நான் கோல் அடித்தபோது, என் பெற்றோரைப் பார்க்கத் திரும்பினேன். அவர்கள் முகத்தில் இருந்த புன்னகை, ஆனந்தம், இன்பம் எங்களது அனைத்து கஷ்டங்களையும் பயனுள்ளதாக்கியது. அந்த நேரத்தில், நான் அதுகாறும் ஆடுகளத்தில் உழைத்த அனைத்து வருட கடின உழைப்பு, எனது கனவை நான் பின்பற்றுவதை உறுதிசெய்ய எனது குடும்பத்தினர் செய்த அனைத்து தியாகங்களும், நாங்கள் எதிர்கொண்ட அனைத்துப் பணக்கஷ்டங்களும் அந்த ஒரு தருணத்தில் எல்லாம் இந்த நல்லதுக்காகத்தான் என்பதை உணர வைத்தது.
எனக்காக அத்தனைப் பணக்கஷ்டத்திலும் தியாகங்கள் செய்த என் பெற்றோரின் முகங்களில் கண்ட மகிழ்ச்சியும் ஆனந்தமும் என்னால் மறக்க முடியாதது. அந்தத் தருணத்தை எந்நாளும் என் இருதயத்தில் வைத்துப் பாதுகாப்பேன். எங்கு எல்லாம் தொடங்கியதோ அந்த இடத்திலேயே நான் சாதிப்பது என்பது எனக்கு பல தூக்கமில்லா இரவுகளைக் கொடுத்தவை. ஹாக்கி ஆட்டத்தை பெரிதும் நேசிக்கும் ரசிகர்கள் மத்தியில் எங்களைக் கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில் இறங்குவது மிகப்பெரிய விஷயம்.
நாங்கள் விளையாடுவதைப் பார்க்க மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் வந்து எனக்கும் அணிக்கும் ஆதரவளித்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பட்டம் வென்றது எனக்கு அபரிமிதமான நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும் கடினமாக உழைக்கவும், இந்திய ஜெர்சியை மீண்டும் அணிவதற்கான எனது தகுதியை நிரூபிக்கவும் என்னை அதிக உறுதியுடன் ஆக்கியுள்ளது” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
