சென்னை: சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது.
படம்பற்றி இயக்குநர் அன்புவிடம் கேட்டபோது, “இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் படம். விஜயகாந்த் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அது இதில் இருக்கும். கதை ஒடிசாவில் நடப்பதுபோல படமாக்கப்படுகிறது. ஹீரோவுக்கும் யானைக்கும் ஒரு பாசப் பிணைப்பு இருக்கிறது. சகோதரனை போல பாவிக்கும் யானைக்கு ஒன்று என்றால் ஹீரோ அதை எப்படி எதிர்கொள்கிறார் என்று கதை போகும். யானைகள் தொடர்பான காட்சிகளை பாங்காக்கில் எடுக்க இருக்கிறோம். ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டோம். அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
