`உழைப்பின் பலனை எதிர்பார்ப்பது மனித இயல்புதான்’ – ‘கருவறை’ இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு

இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி தயாரித்த ‘கருவறை’ ஆவண படத்துக்காக இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் இ.வி.கணேஷ் பாபுவிடம் பேசினேன்.

நீங்கள் தொடர்ந்து திரைத்துறையில் பல வருடங்களாக இயங்கி வருகிறீர்கள். எதன் அடிப்படையில் `கருவறை` குறும்படத்தை தேசிய விருதுக்கு அனுப்பியிருந்தீர்கள்? ‘கருவறை’ படத்திற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

நிச்சயமாக. நான் எதிர்பார்த்தேன். உழைப்பின் பலனை எதிர்பார்ப்பது மனித இயல்பு தான். ஏனென்றால் இந்தப் படத்தின் கதையாக இருக்கட்டும், பாடலாக இருக்கட்டும், எடிட்டிங்காக இருக்கட்டும். இசையாக இருக்கட்டும் எல்லாமே அந்த அளவு ஒரு உயிர்ப்புடன் வந்திருந்தது. இந்தியன் மனோரமா பெஸ்டிவலில் இந்தப் படம் செலக்ட் ஆகவில்லை. ஆனால், அங்குள்ளவர்கள் இந்தப் படம் மிகவும் எல்லாவிதத்திலும் அருமையாக வந்திருந்தது என்பதைச் சொல்லியிருந்தார்கள். அதன்பிறகுதான், நான் தேசிய விருதுக்கு இந்தப் படத்தை அனுப்பி இருந்தேன். மிகவும் எதிர்ப்பார்த்தும் இருந்தேன். அந்தவகையில் தேர்வுக் குழுவிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் இந்தக் குறும்படத்திற்கு இசைக்காக தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா குறித்து?

‘சிவகாசி’ படத்தில் தான் நடிகர் விஜய் சாரும், டைரக்டர் பேரரசு சாரும் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார்கள். அதிலிருந்து எங்களது நட்பு தொடர்கிறது. மேலும் ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் அந்த அளவு அருமையான மெலோடிஸ் பண்ணியிருப்பார். அப்போதுதான் நினைத்தேன்… ஏன் இவரிடம் இப்படியான மெலோடிப் பாடல்களை வாங்கக்கூடாது என்று நினைத்து கேட்டு வாங்கப்பட்டது தான் இந்தப் பாடல்.

மேலும் ‘கட்டில்’ படத்தில் கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் என்கிற சித்ஸ்ரீராம் பாடிய பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். இதுவும் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தப் படம் பான் இந்தியா படமாக வர இருக்கிறது. இப்படித்தான் இன்றுவரை எங்களது கூட்டணி தொடர்கிறது. இந்த தேசிய விருது எனக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி ‘கட்டில்’ படத்திற்கு பெரிய ஊக்கமாக எனக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.

‘கருவறை’ படம் குறித்து?

ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, எனது மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி, ரோகிணி ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான் வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படும் அவலத்தை நான் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறேன்.

இங்கு நாம் எல்லோருமே நடுத்தரக் குடும்ப வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஒரு குழந்தைக்கு அடுத்ததாக இன்னொரு குழந்தைப் பெற்றுக்கொள்ள வறுமையின் காரணமாக பலகட்டங்களாக யோசிக்க வேண்டிய சூழல் தான் இருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் தொடரும் தம்பதியின் குடும்பத்தில் இரண்டாவதாக ஒரு குழந்தை ஜெனிக்கிறது. அதனை பொருளாதார ரீதியாக பெற்றெடுக்க தம்பதிகள் படும் கஷ்டத்தை எப்படி எப்படி உணர்கிறார்கள் என்பது தான் இதன் அடித்தளம். அருமையாக வந்திருக்கிறது. இது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மற்றபடி இந்தப் படத்தின் பெயரில் நிறைய யூடியூப்பில் குறும்படங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தப் படம் அது இல்லை என்கிறார் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு.

– தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *