பாகு: அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தேர்வாகியுள்ளார். அது தனக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்துள்ளார் அவரது தாயார் நாகலட்சுமி.
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டைபிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தை சேர்ந்த இந்தியாவின் 18 வயதான இளம் வீரர் பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார். அதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் 2024-க்கு அவர் தேர்வாகியுள்ளார்.
“அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் தொடரில் கலந்து கொண்டு எனது மகன் இறுதிப் போட்டி வரை விளையாடினான். இந்தத் தொடரில் அவனது செயல்பாடு, கொடுத்த ரிசல்ட்டும் எங்களுக்கு சந்தோஷம் கொடுக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் கலந்து கொள்கிற வாய்ப்பு அவனுக்கு கிடைத்ததில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. இந்தத் தொடரில் அவன் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றபோது நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். அப்போது நான் அறியாத போது என்னை போட்டோ எடுத்துள்ளனர். அதை நிறைய பேர் பார்த்திருந்தனர் என தெரிந்து கொண்டேன். அவன் செஸ் விளையாட்டில் நீண்ட தூரம் போக வேண்டி உள்ளது. அனைவருக்கும் நன்றி” என பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in