தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 9 மாதங்களை கடந்தும் இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் குற்றம்சாட்டிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும், அந்த ஆணையம் எந்தப் புள்ளி விவரங்களையும் கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தலைவர் ராமதாஸ் முதல்வருக்கு 6 முறை கடிதம் எழுதியிருக்கிறார் 10 முறை தொலைபேசி மூலம் பேசியிருக்கிறோம். ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், இந்த சட்டப்பேரவையிலேயே கொண்டுவர வேண்டும்.
இது தொடர்பாகதான் அழுத்தம் கொடுத்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின், பேசி முடிவெடுப்போம் எனக் கூறியிருக்கிறார். 1980 முதல் 1987 வரை பல கட்ட போராட்டங்கள் நடத்தி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றது பா.ம.க. இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வன்னியர்கள். அப்படிப் பெற்ற இந்த 20 சதவிகித இடஒதுக்கீட்டிலும் சரியான பிரதிநிதித்துவம் வன்னியர்களுக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 60 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது. அப்படி இருந்தும், தமிழ்நாட்டில் வன்னியர் சமூகம் அதிகம் இருக்கும் 15 வட மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளாக 10,12 வகுப்பு மாணவர்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக, அதிக குடிசை இருக்கும், வேலை இல்லா இளைஞர்கள் அதிகம் இருக்கும், அதிக மது விற்பனை நடக்கும் மாவட்டங்களாகவே இருக்கிறது. இதை சரிசெய்ய வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கிட்டை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அரசு கொண்டுவந்திருக்கலாம். அந்த எண்ணம் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை.
சாதி வாரி கணக்கெடுப்புக்கும் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல முறை பா.ம.க வலியுறுத்தியிருக்கிறது. .69 சதவிகித இட ஒதுக்கீட்டை நீக்க நீதிமன்றம் முயன்ற போது,” அரசு நிர்ணயித்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நிவர்த்தி செய்யும் அளவு மக்கள் இருக்கிறார்களா?’ என கேள்வி எழுப்பியது. எனவே, அதை தக்க வைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். தமிழ்நாட்டில் சமூக நீதி பேசும் தி.மு.க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

பேசினால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் காண்பிக்க வேண்டும். மது ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஆகியவை சமூக நீதி பிரச்னை. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும் சமூகம் முன்னேறினால், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இதில் எந்தவித அரசியலும் கிடையாது. காவிரி பிரச்னை விவசாயப் பிரச்னை எனப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருக்கிறது. அதில் பெரும்பாலான மாவட்டங்களுக்கான குடிநீர், வாழ்வாதாரம், விவசாயம் என பல்வேறு பிரச்னைகள் இந்தக் காவிரி நீரைச் சார்ந்தே இருக்கிறது. சென்னை, சிவகங்கை, வேலும், திருவண்ணாமலை, திருச்சி, எனப் பல்வேறு மாவட்டங்கள் காவிரியை நம்பிதான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com