ராமன் ராகவ்: 40 கொலைகள், பல பெயர்கள் – இவரை இளம் காவல் அதிகாரி மடக்கியது எப்படி? – BBC News தமிழ்

ராமன் ராகவ்: 40 கொலைகள், பல பெயர்கள் - இவரை இளம் காவல் அதிகாரி மடக்கியது எப்படி? - BBC News தமிழ்

கொலைகாரன் ராமன் ராகவன்

பட மூலாதாரம், LILY KULKARNI

படக்குறிப்பு,

இரவு நேரங்களில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்களைக் கொடூரமாகக் கொலை செய்த நபராக ராமன் ராகவ் அறியப்பட்டார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், ராமன் ராகவ் என்ற கொலைகாரன் ஒன்பது பேரை வக்கிரமான, மிருகத்தனமான தாக்குதலில் கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்துக்கு வந்து, தான் கொலைகளைச் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்த போது, அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் கருதினர். அதனால் அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் 40 பேரின் உயிரையும் பறித்த அதே ராமன் ராகவ் ஒரு சீரியல் கில்லராக மாறிய போது மும்பை மட்டுமல்ல, நாடு முழுவதும் ஒரு அச்சம் பரவியது.

எந்த நவீன ஆயுதமும் இல்லாமல், வெறும் கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் பொதுமக்களின் தலையில் தாக்கி மிகக் கொடூரமாக அப்பாவி மக்களைக் அவர் கொலை செய்தார்.

மிகைப்படுத்தப்பட்ட, கற்பனையான திரைப்பட வில்லன்களைக் காட்டிலும் இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் நியாயமற்ற முறையில் ராமன் ராகவ் இந்த கொலைகளைச் செய்தது, பின்னர் பல ஆவணப்படங்கள், திரைப்படங்கள், வலைத் தொடர்கள் போன்றவற்றின் கதைக் கருவாக மாறியது.

அனுராக் காஷ்யப்பின் ராமன் ராகவ் 2.0 திரைப்படம் அவற்றில் ஒன்று.

இந்தப் படத்தில் நவாசுதீன் சித்திக் ராமன் ராகவாக நடித்திருந்தார். உண்மையில் இத்திரைப்படம் ராமன் ராகவின் உண்மைக் கதையைச் சொல்வதாகக் கூறப்பட்டிருந்தாலும், அது உண்மையான ராமன் ராகவின் கதை அல்ல. உண்மையில் ராமன் ராகவ் என்ன செய்தார்?

சீரியல் கில்லர் ராமன் ராகவ், இந்த கொலைகளைச் செய்ய கடவுள் உத்தரவிட்டதாக போலீசாரின் விசாரணையின் போது தெரிவித்தார். கடவுன் அவருடன் வயர்லெஸ் தொடர்பில் இருந்ததாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்த ராமன் ராகவ், மேலும் சில விஷயங்களைச் சொன்னதாக அக்காலத்தில் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த ராமன் ராகவை சிறையில் அடைத்த காவல் துறையினர் அந்த விசாரணை தொடர்பான விவரங்களை புத்தக வடிவில் அல்லது நேர்காணல் மூலம் வெளியிட்டனர்.

உண்மையில் ராமன் ராகவ் யார்? அவர் ஏன் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்தார்? இறுதியில் அவருக்கு என்ன ஆனது?

ராமன் ராகவ் குறித்த உண்மையான விவரங்களைப் பார்ப்போம்.

அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை

அறுபதுகளில் மும்பை எப்படி இருந்தது என்பதை பழைய திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இன்று இருப்பதைப் போல் அப்போது பெரும் கூட்டம் இல்லாவிட்டாலும், ‘சிறு குழந்தைகளுக்கு’ எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத்தந்த ஒரு கூட்டம் நிறைந்த பெருநகரமாக அன்று இருந்தது மும்பை.

மும்பையின் வசீகரம் காரணமாக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வந்து வாழ்கின்றனர். அதிக செலவு மிக்க மாயநகரமாக விளங்கும் மும்பையின் மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இப்படி ஏராளமானோர் வசித்து வருகின்றனர். சில சமயங்களில் நடைபாதைகளிலும் மக்கள் வசிக்கத் தொடங்கினர்.

1965-66 காலகட்டத்தில் நடைபாதைகளிலும் சிறு குடிசைகளிலும் வாழ்ந்து வந்த பலர் அந்த இடங்களில் இருந்து அகற்றப்பட்டனர்.

கொலைகாரன் ராமன் ராகவன்
படக்குறிப்பு,

தொடர் கொலைகளை அரங்கேற்றிவந்த ராமன் ராகவைக் கைது செய்ய போலீசார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இரவு நேரங்களில் நடைபாதை உள்ளிட்ட திறந்தவெளியில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை அடையாளம் தெரியாத யாரோ ஒருவர் கொடூரமாகத் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்தன. இதில், கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஜிஐபி லைனைச் சுற்றி வசித்த 19 பேர், அதாவது ரயில் நிலையத்தின் அருகில் வசித்த 19 பேர் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நகை, பணம் உள்ளிட்ட எதையாவது திருடுவதற்காக அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் கொடூரமான குற்றவாளிகளைக் கையாண்ட காவல்துறையினருக்கு கூட இந்தத் தாக்குதலை யார் நடத்தியது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இது போல் கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீசாரிடம் எழுந்தது. இந்த சம்பவங்களில் உயிர் பிழைத்த யாரும், அவர்களை யார் தாக்கினார் என்பதைப் பார்க்கவில்லை. இது குற்றவாளியை நெருங்குவதில் போலீசாருக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, குற்றப் பதிவு ஆவணங்களில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த பழைய குற்றவாளிகளை போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். அப்பகுதி முழுவதும் இரவு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது இசாம் என்ற நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது பெயர் ராமன் ராகவ் என்று தெரியவந்தது. ஆனால், இந்த கொடூர தாக்குதல் மற்றும் கொலைகளை அவர் தான் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை விடுவித்த போலீசார், அவரை மும்பைக்கு வெளியே கொண்டு சென்று விட்டனர். மேலும், மும்பை நகருக்குள் வரக்கூடாது என்றும் அவரை போலீசார் எச்சரித்திருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிந்தி தல்வாய், வேலுசாமி, தம்பி, அண்ணா உள்ளிட்ட பல பெயர்களுடன் அதே ராமன் ராகவ் மும்பைக்குத் திரும்பி வந்து பல அப்பாவி ஏழைகளைப் படுகொலை செய்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேறிய படுகொலைகள்

1968 ஆம் ஆண்டின் மையப்பகுதியில், மும்பையின் தெருக்களில் மீண்டும் இதேபோன்ற தொடர் சம்பவங்கள் நடக்கத் தொடங்கின. நடைபாதைகளில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் இரும்பு ராடுகளால் தலையில் அடித்துக் கொல்லப்பட்டனர்.

காவல் துறையின் பதிவேடுகளில் இடம்பெற்றிருந்த ராமன் ராகவ் என்கிற சிந்தி தல்வாய் 24 கொலைகளைச் செய்திருந்தாலும், உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று அஞ்சப்படுகிறது. அந்த நேரத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட இளம் காவல் துறை அதிகாரி ரமாகாந்த் குல்கர்னி இந்தத் தாக்குதல் குறித்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கொலைகாரன் ராமன் ராகவன்

பட மூலாதாரம், LILY KULKARNI

படக்குறிப்பு,

காவல் துறையில் பணியாற்றிய இளம் அதிகாரியான ரமாகாந்த் குல்கர்னி தொடர் கொலைகள் குறித்த விசாரணையில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

அதே ரமாகாந்த் குல்கர்னி பின்னர் மகாராஷ்டிராவின் காவல்துறை தலைமை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவர் விசாரணை நடத்திய காலகட்டத்தில் அவரது குற்ற விசாரணை முறை மிகவும் பிரபலமாக இருந்தது. உலகப்புகழ்பெற்ற கிரைம் நாவல்களை எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸுடன் அவர் ஒப்பிடப்பட்டார்.

அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘ஃபுட்பிரிண்ட்ஸ் ஆன் த சாண்ட் ஆஃப் கிரைம்’ (Footprints on the Sand of Crime) என்ற புத்தகத்தை எழுதி, சவால் நிறைந்த வழக்குகள் குறித்த விவரங்களையும், அந்த வழக்கு விசாரணையின் போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். அதில், ராமன் ராகவின் கதையும் இடம்பெற்றுள்ளது. ராமன் ராகவை ரமாகாந்த் குல்கர்னி எப்படிப் பிடித்தார் என்பது பற்றியும், தொடர் கொலைகாரன் என்ற கோணத்தில் நடைபெற்ற விசாரணை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

“பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் அவற்றில் இடம்பெறும் கதைகளை நம்பிய ஒரு தலைமுறைக்கு, குற்றவாளியை போலீசார் பிடித்தவுடன் வழக்கு முடிவடைகிறது என்றே தோன்றும். ஆனால் உண்மையில் காவல்துறைக்கு அந்த வழக்கு அங்கே தான் தொடங்குகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறையிடம் அளிக்கும் வாக்குமூலங்களை இந்திய நீதித்துறை ஏற்பதில்லை. நீதிமன்றத்தில் ஒரு மாஜிஸ்திரேட் முன் குற்றம் சாட்டப்பட்டவர் அளிக்கும் வாக்குமூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மட்டுமின்றி, போலீசார் தெரிவிக்கும் ஒவ்வொரு விசாரணைத் தகவலுக்கும் தனித்தனி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியும்’’ என்று இந்த நூலில் எழுதியுள்ளார்

ஒரு தொடர் கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது?

ரமாகாந்த் குல்கர்னி என்ற இளம் காவல் அதிகாரி, மும்பை காவல் நிலையங்களின் பழைய பதிவுகளை சரிபார்க்கும் போது, ​​​​இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலையோர படுகொலை தொடர்பாக ஒரு நபர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டிருந்ததை கவனிக்கிறார்.

இந்த முறையும் ராமன் ராகவ்தான் குற்றவாளியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட விசாரணை அதிகாரிகள், அதற்கேற்ப விசாரணையின் புள்ளிகளை இணைக்க ஆரம்பித்தனர். ராமன் ராகவ் பல பெயர்களில் அறியப்பட்டவராக இருந்தார். அவர் மும்பையிலிருந்து விரட்டி விடப்பட்ட பிறகு அவரைப் பற்றிய பதிவுகள் காவல்துறையிடம் இல்லை.

கொலைகாரன் ராமன் ராகவன்

பட மூலாதாரம், LILY KULKARNI

படக்குறிப்பு,

ராமன் ராகவ் தெருவோரம் வாழ்ந்து வந்ததால் அவருக்கென்று தனியான முகவரி எதுவும் கிடைக்கவில்லை.

அந்த ராமன் ராகவ் தெருவோரம் வாழ்ந்து வந்ததால் அவருக்கென்று தனியான முகவரி எதுவும் இல்லை. மேலும், அவரைப் பற்றிய தகவல்கள் வேறு எந்தக் காவல் நிலையத்திலும் இல்லை.

தெருவோரம் வாழும், சாதாரணமாகத் தோற்றமளிக்கும் ஒரு நபரைத் தேடி அந்த நாட்களில் மும்பை நகர் முழுவதும் அலைவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

மேலும், அப்படித் தேடும் போது கூட, இருளில் இது போன்ற கொலைகளை அரங்கேற்றி வந்த ஒரு நபர், சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே அவரைக் கண்டுபிடிக்க முடியும். இது மட்டுமின்றி ராமன் ராகவ் என்கிற சித்திக் தல்வாய் என்கிற தம்பி உள்ளிட்ட பெயர்களில் அலைந்த அந்த நபர் மீது குற்றம் சாட்ட போலீசாரிடம் எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை.

ரமாகாந்த் குல்கர்னியின் புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது: அப்போது உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய இளவயது நபரான அலெக்ஸ் ஃபியல்ஹோ கண்டுபிடித்த ஒரு விஷயம் தான் இந்த ராமன் ராகவை கைது செய்ய வழிவகுத்தது.

‘க்ரைம் வயர்’ என்ற ஊடகத்தில் வந்த கட்டுரையில், ஃபியல்ஹோ அந்த அனுபவத்தை விவரித்திருந்தார். “அந்தத் தொடர் கொலையாளியின் படத்தை நான் என் பாக்கெட்டில் வைத்திருந்தேன். மேலும், ஒரு நாள் நான் வேலைக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, காக்கி மற்றும் நீலவண்ண ஆடையணிந்த ஒரு நபர், என் பாக்கெட்டில் வைத்திருந்த படத்தில் இருந்த நபருடன் முகச்சாயலில் ஒத்துப் போவதைக் கண்டுபிடித்தேன்.”

“அந்த நபர் கையில் ஒரு ஈரக்குடையை வைத்திருந்தார். ஆனால் அப்போது நான் இருந்த தெற்கு மும்பை பகுதியில் மழையே பெய்யவில்லை. இதனால் அவர் வைத்திருந்த ஈரமான குடை என் சந்தேகத்துக்கு வலுவூட்டியது. இதுபற்றி அந்த நபரிடம் கேட்டபோது மலாட்டில் இருந்து வந்ததாக கூறினார். அதே நேரம், மும்பையில் இதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.”

‘க்ரைம் வயரில்’ ஃபியல்ஹோ எழுதிய கட்டுரையில் தொடர்ந்து இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முழுமையாக விசாரித்தபோது, ​​அவர் ஒரு ஜோடி ஹஃபாரிம் கண்ணாடி மற்றும் ஒரு தையல்காரர் விரலில் ஊசி குத்துவதைத் தவிர்க்க அணியும் மோதிரம் போன்ற உலோகம் ஆகியவற்றை வைத்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மலாட் படுகொலையில் ஒரு தையல்காரரும் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், அந்த நபர் வைத்திருந்த அந்த உலோகம் அந்த தையல்காரருடையது என்பது தெரியவந்தது.”

ராமன் ராகவ் ஆகஸ்ட் 27, 1968 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது குற்றம் பற்றிய இறுதி வாக்குமூலம், நீதிமன்ற விசாரணைகள், தீர்ப்பு, உயர்நீதிமன்றத்தில் மறு விசாரணைகள் என அந்த வழக்கு தொடர்ந்தது.

கோழி இறைச்சியை சாப்பிட்ட பிறகுதான் வாய் திறந்தது

ராமன் ராகவ் என்ற இந்த சீரியல் கில்லர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் எவ்வளவு தூரம் உணர்ச்சிவசப்படக் கூடியவர் மற்றும் விசித்திரமானவர் என்பதை போலீசார் யூகிக்கத் தொடங்கினர்.

ரமாகாந்த் குல்கர்னியின் புத்தகத்தின்படி, அவரை வாய் திறக்க வைப்பது எளிதான செயலாக இல்லை. அங்குதான் காவல்துறையின் உண்மையான போராட்டம் தொடங்கியது. குல்கர்னி, இந்த விசாரணையின் போது தானும் பேச வேண்டும் என்பதை உணர்ந்தார்.

கொலைகாரன் ராமன் ராகவன்

பட மூலாதாரம், LILY KULKARNI

படக்குறிப்பு,

விசாரணையின் போது, கண்ணாடி, வாசனை திரவியங்களை வாங்கித் தருமாறு போலீசாரிடம் ராமன் ராகவ் கேட்டார்.

ஏனென்றால் காவல் துறையினர் எப்படி விசாரித்தும் அந்த நபர் எதுவும் பேசவில்லை. இந்நிலையில், சாப்பிட என்ன வேண்டும் என அவரிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டனர். அவர் தனக்கு கோழி இறைச்சி வேண்டும் எனக்கேட்டார். இதையடுத்து போலீசார் கோழி இறைச்சியை வாங்கிக்கொடுத்தனர்.

பின்னர் தலைக்குத் தேய்க்க நறுமணத்துடன் கூடிய எண்ணெய், மற்றும் வாசனை திரவியம், கண்ணாடி உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுக்குமாறு போலீசாரிடம் கேட்டுள்ளார். பின்னர் தலையில் நறுமணம் மிக்க எண்ணெய் தேய்த்துக் கொண்டு மனநிறைவுடன் இருந்த அவரிடம் இருந்து மெதுவாக விஷயங்களை வெளிக்கொண்டுவர போலீசார் முயன்றனர்.

அதன்பிறகு தான் அந்தக் கொலையாளி வாயைத் திறந்து பல உண்மைகளைப் பேசத் தொடங்கினார். கொலை நடந்த இடங்கள், கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி வைக்கப்பட்ட இடம், கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் என அனைத்தையும் போலீசாருடன் சென்று அவர்களுக்குக் காட்டினார். மேலும், நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு இதேபோன்ற வாக்குமூலத்தை அளிப்பதாகவும் உறுதியளித்தார்.

முதலில் மரண தண்டனை, பிறகு ஆயுள் தண்டனை

ராமன் ராகவ் மீதான வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, ​அவர் ​மனதில் தோன்றியதை எல்லாம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துகொண்டார். இருப்பினும் அவரது அந்த வாக்குமூலங்களைக் கேட்ட நீதிமன்றம், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டதுடன், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் மரண தண்டனையை நேரடியாக நிறைவேற்ற முடியாது. அதற்கு, உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் உள்ளது. அதன்படி, இந்த தொடர் கொலையாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கொலைகாரன் ராமன் ராகவன்

பட மூலாதாரம், LILY KULKARNI

படக்குறிப்பு,

நீதிமன்றம் தண்டனை விதித்தது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ராமன் ராகவ் மனநலம் பாதிக்கப்பட்டவரா, குற்றம் நடந்தபோது அவரது மனநிலை எந்தநிலையில் இருந்தது என்பதைக் கண்டறிய மனநல மருத்துவர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

ராமன் ராகவ் கடவுளின் உத்தரவை நிறைவேற்றவேண்டும் என்று கூறுகிறார்.

“இவர்களைக் கொலை செய்ய வானத்திலிருந்து உத்தரவு வந்ததாக அவர் கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ கற்பனை உலகில் வாழ்ந்தபோது அவர் இந்தச் செயல்களைச் செய்தார் என்று தான் கருதவேண்டும். அவருக்கு நாள்பட்ட சித்தப்பிரமை எனப்படும் ஸ்கிசோஃப்ரினியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு மாற்றாக ஆயுள் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதுடன், அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்,” என ஆகஸ்ட் 4, 1987 தேதியிட்ட தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியது.

பாரனாய்ட் ஸ்கிசோஃப்ரினியா என்றால் என்ன?

ஸ்கிசோஃப்ரினியா என்ற சொல் முழுமையாக மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும ஒரு சொல்லாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒரு நபர் பிளவுபட்ட ஆளுமையைக் கொண்டவராக இருப்பார். அவர் எப்போதும் ஒரு கற்பனையான உலகில் வாழ்ந்துகொண்டிருப்பார்.

இது போன்ற பாதிப்பைக் கொண்ட நபர்கள், அவர்களுடன் யாரோ பேசுவதைப் போல உணர்கிறார்கள். அவர்களின் காதுகளில் குரல்கள் ஒலிக்கின்றன என்பது மட்டுமின்றி எதிர்மறையான எண்ணங்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த மாயத்தோற்றங்கள் அத்தகைய நபர்களை ஆக்ரோஷமானவர்களாக ஆக்குகின்றன. மேலும், மற்றவர்களைக் கொல்லும் எண்ணங்கள் கூட அவர்களின் மனதில் எழும் ஆபத்து இருக்கிறது.

70களில் ராமன் ராகவ் சிறையில் இருந்த போதே அவருடன் மனநல மருத்துவரான ஆனந்த் பட்கர் பல முறை உரையாற்றியுள்ளார். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மனநல மருத்துவர் பட்கரின் கணிப்பின்படி, நீண்டகால மனநலபாதிப்பு ராமன் ராகவை கொலை செய்யுமளவுக்கு தூண்டியுள்ளது.

புனேவில் உள்ள எரவாடா சிறையில் காலமானார்

மும்பையின் வரலாற்றில் இடம்பெற்ற இந்த கொடூரமான, விசித்திரமான, மனநோய் பாதித்த தொடர் கொலையாளிக்கு இறுதியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புனேவின் எரவாடா சிறைக்கு அனுப்பப்பட்டார்.

உண்மையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்தோ, அல்லது அவரது மனநிலை குறித்தோ பெரிய அளவில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் ஏப்ரல் 1995 இல், ராமன் ராகவ் சிறுநீரக செயலிழப்பால் எரவாடா மத்திய சிறையில் உயிரிழந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *